CHICAGO
NEW YORK
LONDON
INDIA
HONGKONG
TOKYO
SYDNEY
Business
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

கட்டுரைகள்

கட்டுப்படுத்த அக்கறையில்லை

27 January, 2016,Wednesday

கட்டுப்படுத்த அக்கறையில்லை

கட்டுப்படுத்த அக்கறையில்லை...
என். முருகன்

19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகள் மற்றும் மனிதர்களின் புத்திசாலித்தனமான படிப்பறிவு கண்டுபிடிப்புகள் ஆகியன உலகை மிகப்பெரிய மகிழ்ச்சி பூமியாக மாற்றும் என பலர் நம்பினார்கள்.
ஆனால், தாமஸ் ராபர்ட் மால்தூஸ் எனும் ஆங்கிலேயப் பாதிரியார், ஐரோப்பாவின் எல்லா விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் அதிர்ந்து போகும் வண்ணம், "மக்கள்தொகை பற்றிய விவரங்கள்' என்ற ஒரு கட்டுரையை 1798-ஆம் ஆண்டும், பின் தொடர் கட்டுரை ஒன்றை 1803-ஆம் ஆண்டும் வெளியிட்டார். பாதிரியார் மால்தூஸ் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர் என்பதால் உலகெங்கும் இந்தக் கட்டுரை குறித்து விவாதிக்கப்பட்டது.

அந்தக் கட்டுரையின் மையக் கருத்து, "மக்கள்தொகையின் சக்தி, உலகம் மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் சக்தியை விடவும் மிகவும் பெரியது' என்பதே. அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில், உலக மக்கள்தொகை மிகப்பெரிய அளவில் அதிகமாகிக் கொண்டே போனது.
பல யுத்தங்கள், பஞ்சங்கள் மற்றும் தொற்றுநோய்களால் பல மனிதச் சாவுகள் நிகழ்ந்த போதிலும் உலக மக்கள்தொகைப் பெருக்கத்தை ஓரளவிற்குத்தான் அவை குறைத்தன. நிறைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் உணவு உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டு இந்த மக்கள்தொகைப் பெருக்கத்திற்குத் தேவையான உணவை வழங்கியது.

ஆனால், சர்வதேசத்தையும் ஆராய்ந்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட "உலக மக்கள்தொகையின் அம்சங்கள்' எனும் பிரசுரம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
அந்த அறிக்கையின்படி, உலகின் மக்கள்தொகை 2050-ஆம் ஆண்டு வாக்கில் 970 கோடியாக பெருகிவிடும். இதே பெருக்கம் தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் முடிவில் 2099-ஆம் ஆண்டு வாக்கில் உலகின் மக்கள்தொகை 1,120 கோடியாகப் பெருகிவிடும். ஒருநாளைக்கு இரண்டு லட்சம் குழந்தைகள் பிறக்கும் நம் உலகில் இது போன்ற மக்கள்தொகைப் பெருக்கம் தவிர்க்க முடியாததே என்பது நிதர்சனம்.

இந்த கணக்கீட்டின் சுவாரசியமான அம்சம் ஐரோப்பிய நாடுகளில் இந்த நூற்றாண்டில் மக்கள்தொகை குறைந்து விடும் என்பதே. தற்போது, ஐரோப்பாவின் மக்கள்தொகை 73 கோடியே 80 லட்சம். இந்த மக்கள்தொகை 2100-ஆம் ஆண்டு வாக்கில் 64 கோடியே 60 லட்சமாக குறைந்து விடும் என இந்தக் கணக்கீடு கூறுகிறது.
2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்த மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள் 60 வயதுக்கு மேலானவர்களாக இருப்பார்கள். இது போல் மக்கள்தொகை ஐரோப்பிய நாடுகளில் குறைவதற்கான காரணம் என்ன?

ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் மக்கள்தொகையில் இறப்பு விகிதத்தைச் சரி செய்து, மக்கள்தொகை குறையாமலிருக்கத் தேவையான மக்கள் பெருக்க விகிதப்படி ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற குழந்தைகள் பிறப்பீடு இருக்க வேண்டும். ஆனால், தற்சமயம் அது 1.6 குழந்தைகள் பிறப்பீடு ஒரு பெண்ணுக்கு என்று உள்ளது.
இதை அதிகரிக்கத் தேவையான சலுகைகளை கர்ப்பிணிகளுக்கு ஐரோப்பிய அரசுகள் வழங்கினாலும் பிறப்பீடு 1.6-லிருந்து 1.8-ஆகத்தான் உயர முடியுமே அல்லாமல் அதை தேவையான அளவான 2.1-ஆக மாற்றிவிட முடியாது எனக் கூறுகின்றனர் மக்கள்தொகை ஆய்வாளர்கள்.

பல ஏழை நாடுகளிலிருந்து வேலையைத் தேடி ஐரோப்பாவிற்கு வரும் மக்களினால் மக்கள்தொகை உயர்வதும் தேவையான அளவிற்கு இருக்குமா என்பதும் சந்தேகமே. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2022-ஆம் ஆண்டு வாக்கில் சீனாவின் மக்கள்தொகையை விடவும் அதிகமாகிவிடும். உலகின் மொத்த மக்கள்தொகை பெருக்கத்தில் பாதி அளவு ஒன்பது நாடுகளில் ஏற்படுமாம்.
இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா, காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, உகாண்டா மற்றும் அமெரிக்கா ஆகியவையே அந்த ஒன்பது நாடுகள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பிற நாடுகளிலிருந்து அந்நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையே பெருவாரியான மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு காரணமாக அமையும்.
உயர்ந்த கல்வியை இந்தியாவில் கற்று அமெரிக்காவில் குடியேறி, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுபவர்களை ஓர் உதாரணமாக நாம் காட்டலாம். இவர்கள் மேல்தட்டு - நடுத்தர மக்கள் என்பதும், இந்திய அரசின் நிதி செலவீட்டில் கல்வி கற்று வெளிநாட்டில் வேலைக்குச் செல்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மால்தூஸ் குறிப்பிட்டுக்காட்டிய, மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் உணவுப் பஞ்சம் ஆப்பிரிக்காவின் 28 நாடுகளில் 2050-ஆம் ஆண்டு வாக்கில் ஏற்படும். அந்த ஆண்டு வாக்கில், அமெரிக்காவை விட அதிக மக்கள்தொகை உருவாகி நைஜீரியா உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகி விடும் எனக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை ஆய்வுப் பிரிவின் ஜான்வில்மாத், "ஏழைநாடுகளின் மக்கள்தொகைப் பெருக்கம் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்கும். ஏழ்மையை முறியடிக்க முடியாது. சமத்துவம் உருவாக்க முடியாது. பசி மற்றும் தரமான உணவளிப்பை எல்லா மக்களும் பெற முடியாது,' என்று கூறுகிறார்.
"எல்லா நாடுகளிலும் தனியார்கள் மற்றும் பிற உணவுப் பயிர்களை பெருக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்படுகின்றன. ஆனால், உலகின் பாதிக்கப்பட்ட சுற்றுச் சூழலினால் பருவ நிலைகள் பாதிக்கப்பட்டு வறட்சியும், பெருமழை வெள்ளங்களும் உருவாகி, உணவு உற்பத்தி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.
எனவே, விவசாய ஆராய்ச்சியாளர்கள் அவசரகதியில் ஆராய்ச்சிகளை செய்து வறண்ட மற்றும் வெள்ளச் சூழ்நிலைகளை எதிர்கொண்டு வளரும் பல தானிய வகைகளைக் கண்டு பிடிக்க வேண்டும்' என்று கூறுகிறார் பேராசிரியர் ரென்ஸ் ஓயசெனெக்.

இதற்கான அடிப்படைத் தேவை தூய்மையான நீராதாரம் என்பதை உலக நாடுகள் பலவும் தெரிந்து கொண்டு நீர் சேகரிப்பில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் கூறுகிறார் ஓயசெனெக்.
இந்தப் பேராசிரியரின் மற்றுமொரு முக்கியமான கருத்து: உணவுப் பொருள்களை வீணடிக்காமல் இருப்பதே. மேற்கத்திய நாடுகளின் செல்வச் செழிப்பான வாழ்க்கை முறையில் நல்ல தரமான உணவைக் கூட குப்பைத் தொட்டிகளில் வீசி வீணடிக்கும் பழக்க வழக்கங்கள் சாதாரணமாகிப் போய்விட்டன.
தட்டு நிறைய உணவை எடுத்துக் கொண்டு போய் அதில் ஓரளவு உணவை ருசித்து உண்ட பின் மீதமுள்ளதை ஒதுக்கித் தள்ளுவது தன்னை ஒரு பெரும் பணக்காரன் என அருகிலிருப்பவர்கள் எண்ணுவதுதான் காரணமாகிறது என ஒருவர் பேட்டியளித்தாராம்.

அதுபோலவே, உடல் எடையைக் கட்டுப்படுத்த, "உங்கள் தட்டில் உள்ள எல்லாவற்றையும் தின்று தீர்க்க வேண்டும் என எண்ண வேண்டாம்' என மருத்துவர்கள் கூறுவதையும் காணலாம். மேற்கத்திய நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன எனக் கூறுகிறது கணக்கீடு.
உலகிலேயே மிக அதிக அளவு உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுவது அமெரிக்காவில்தான் எனக் கூறுகிறார் பேராசிரியர் ஓயசெனெக். அங்கே உள்ளவர்களின் பழக்கவழக்கங்களை மாற்றி உணவு வீணடிப்பை உடனடியாக அரசு குறைக்காவிட்டால் உலகெங்கிலும் விவசாயப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு உருவாகலாம் என்கிறார்கள்.
காரணம்? அதிகப் பணம் படைத்த அமெரிக்கா அதிக விலை கொடுத்து பிற நாடுகளிலிருந்து உணவை இறக்குமதி செய்து கொள்ளும். ஆனால் ஏழை நாடுகள் பணம் இல்லாத காரணத்தால் உணவுப் பற்றாக்குறையில் தத்தளிக்கும்.

மக்கள்தொகைப் பெருக்கம் உணவுத் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என்ற சரித்திர முக்கியத்துவமான கருத்தை மால்தூஸ் வெளிப்படுத்தி ஒரு நூற்றாண்டு கழிந்த பின், 1909-ஆம் ஆண்டில், இந்து சுவராஜ் பத்திரிகையில் மகாத்மா காந்தி, "நமது கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கங்களை இயற்கை வளங்களால் நிறைவேற்ற முடியாது' என எழுதினார். இதை உலகின் மக்கள்பெருக்கம் பற்றி ஆராயும் பல விஞ்ஞானிகளும் பாராட்டினார்கள்.

இந்தக் கருத்தை முன்னிறுத்தும் வகையில், "சிறிய அளவே அழகானது' என்ற புத்தகத்தை ஆங்கிலேயப் பொருளாதார நிபுணர் சுமாச்சர் எழுதினார். பொருளாதார முன்னேற்றத்தை ஒரு நாட்டின் மக்கள் தவறாக புரிந்துகொண்டு அதிக அளவு உணவுப் பொருள்கள்,ஆடைகள் போன்றவற்றை உபயோகிப்பதும், அவற்றை வீணடிக்கும் குணாதிசயங்களும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்தியாவின் மக்கள்தொகை 1901-ஆம் ஆண்டில் 23 கோடியாக இருந்து, 2001-இல் 102 கோடியாக உயர்ந்தது. 1990 முதல் 1999 வரையில் மட்டும் நம் நாட்டின் மக்கள்தொகை 18 கோடி உயர்ந்துள்ளது. இன்றைய கணக்கீட்டின்படி ஆண்டிற்கு 1.4 சதவீதம் நமது மக்கள்தொகை கூடி வருகிறது என்பதும், இதே காலத்தில், சீனாவின் மக்கள்தொகை ஆண்டிற்கு 0.6 சதவீதமே உயர்ந்து வருகிறது என்பதும் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது.

காரணம், நம்மைவிடவும் அதிக வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுவிட்ட நமது அண்டை நாடான சீனா, தன்நாட்டின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால் நம்மால் முடியவில்லை. இதைப் பற்றி நமது அரசுகளும், அரசியல் தலைவர்களும் எந்த அக்கறையையும் காட்டவில்லை என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.
ஐ.நா. மக்கள்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2022-ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை விடவும் அதிகமாகிவிடும். உலகின் மொத்த மக்கள்தொகை பெருக்கத்தில் பாதி அளவு இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா, காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, உகாண்டா மற்றும் அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் ஏற்படுமாம்

விமர்சனம்

முன்னைய செய்திகள்

பெண்களின் ஆடை பண்புடையதாய்

>Feb-07-2016 மேலும்...

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா

>Feb-07-2016 மேலும்...

தை பிறந்தால் வழி பிறக்கும்

>Jan-27-2016 மேலும்...

பார்வைகள்

>Jan-27-2016 மேலும்...
 
மரணஅறிவித்தல்
நினைவஞ்சலி
விளம்பரங்கள்
அதிசயங்கள்
வினா விடை பரிசு
BBN TAMIL FM மரணஅறிவித்தல்
வாசகர்கள்
நாணய மாற்றி
உலக ஜனாதிபதிகள்
உலக கொடிகள்